சென்னை அருகே கேளம்பாக்கத்தை அடுத்த படூர் ஊராட்சியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தை அடுத்த படூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று தொடங்கியுள்ளது.
சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று கடந்த 26.02.23 அன்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் கருவேல மரங்கள் அகற்றும் பணியை துவங்கி வைத்தார். இதனை அடுத்து மரங்கள் அகற்ற ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மரங்கள் அறுக்கும் இயந்திரங்களை கொண்டு மரங்களை அகற்றும் பணி தொடங்கியது. மேலும் ஊராட்சியில் உள்ள அனைத்து சீமை கருவேல மரங்களையும் மூன்று மாதத்திற்குள் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
—கோ. சிவசங்கரன்







