தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் திரைபபடம் ஆஸ்கார் விருதை பெற்றதை சிறப்பிக்கும் வகையில் டூடுல் வெளியிட்டுள்ளது அமுல் இந்தியா நிறுவனம். இது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. வண்ணமயமான அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றனர்.
இதேபோல், முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள யானைகளுக்கும், பாகன்களுக்கும் இடையே உள்ள உறவு முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவண குறும்படமான தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படமும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது.
எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR மற்றும் The Elephant Whisperers ஆகிய படங்கள் தலா ஒரு ஆஸ்கார் விருதை வென்றதை நாடு முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் திரைபபடம் ஆஸ்கார் விருதை பெற்றதை சிறப்பிக்கும் வகையில் அமுல் இந்தியா நிறுவனம் டூடுல் வெளியிட்டு கொண்டாடியுள்ளது. இந்த டூடுல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
அமுல் இந்தியா நிறுவன டூடுலில், தயாரிப்பாளரான குனீத் மோங்கா மற்றும் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோரின் அனிமேஷன் பதிப்புகள் இடம் பெற்றுள்ளன. டூடுலில் யானை மற்றும் அமுல் பெண்ணும் இடம்பெற்றுள்ளனர். மேலும் டூடுலில், “ஹாதி மேரே சாத்தி. அமுல் ஜம்போ டேஸ்ட்.” போன்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகளுக்கு, ஹால் அவுட், ஹவ் டூ யூ மெஷர் எ இயர், தி மார்த்தா மிட்செல் எஃபெக்ட் மற்றும் ஸ்ட்ரேஞ்சர் அட் தி கேட் ஆகியவற்றுடன் ஆவணப்பட குறும்படப் பிரிவில் தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பி.ஜேம்ஸ் லிசா










