17 ஏ பிரிவு வகை நிலத்தில் இருக்கும் பிரச்சினை, டேன் டீ பிரச்சினைகள்
குறித்து சென்னையில் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
உதகை 200வது ஆண்டு துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா மேடையின் அருகில் உதகை குறித்த புகைபடப் கண்காட்சியைப் பார்வையிட்டார்.
விழா துவங்கியதும் முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்க மாவட்ட ஆட்சியர் அம்ரித் வந்தபோது நிலைதடுமாறினார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் ஆட்சியர் அம்ரித்தை தாங்கிப் பிடித்தனர். பின்னர், 118.79 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவடைந்த திட்டப் பணிகளை திறந்துவைத்தல், 9,422 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், படுகர், தோடர் , கோத்தர் இன மக்களின் மொழிகளில் “வணக்கம்” தெரிவித்தார். வாழ்வில் எத்தனையோ முறை உதகை வந்திருத்தாலும், முதலமைச்சராக உங்களைச் சந்திக்க வந்திருப்பதில் ஊட்டியைப் போலவே மனதும் குளிர்ச்சியாக இருக்கின்றது. ஐ.நா நீலகிரியை உயிர்க்கோள் காப்பகமாக அறிவித்துள்ளது. இங்கு நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பாகும்.
நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, அமைச்சர் ராமசந்திரன் அனைத்து சமூக மக்களின் அன்பைப் பெற்றவராக இருக்கின்றார். இந்த மாவட்டத்திற்கே ராஜாவாக ஆ.ராசா மக்களின் மனதில் இருக்கின்றார். இங்கு நடைபெறுவது அரசு விழாவா ? மாநாடா என்று சந்தேகப்படும் அளவிற்கு கூட்டம் இருக்கின்றது. பேருந்துகளை நாட்டுடமையாக்கும் திட்டத்தை கலைஞர் உதகையில் இருந்துதான் செயல்படுத்தினார் என்பதை நினைவுகூர்ந்தார். கலைஞர் உதகைக்கு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கியுள்ளார். அந்த சாதனை சரித்திரத்தை இந்த அரசு தொடர்கின்றது.
பேரிடர் காலங்களில் நீலகிரிக்கு ஓடிவரும் அரசுதான் இந்த அரசு. ஆட்சியில் இல்லாத
நேரத்திலும் மக்களுக்காகப் பணியாற்றினோம். நீலகிரி மாவட்டத்தில் தெப்பக்காடு யானைகள் முகாம் சிறந்த மையமாக செயல்பட்டு வருகின்றது. தெப்பக்காட்டில் நவீன யானைகள் பாதுகாப்பு மையம் உருவாக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில்
பொருளாதார மேம்பாட்டிற்கு பதப்படுத்தபட்ட ஏற்றுமதி மையம் அமைக்க அரசு முடிவு
செய்துள்ளது. சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து வாரியத்தில் சேரக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் 17 ஏ பிரிவு வகை நிலத்தில் இருக்கும் பிரச்சினை, டேன்டீ பிரச்சினைகள் குறித்து சென்னை சென்றதும், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுசூழலை கணக்கில்
வைத்து நீலகிரி பிளான் ஏரியா தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
தமிழகத்தின் வனத்தைப் பாதுகாக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மலைகளோடு சேர்த்து இந்த அரசு மக்களையும், அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும். சுயமரியாதைகாரன் என்றால் இயற்கை மனிதன் என்று பொருள். இதை சொன்னவர் தந்தை பெரியார். இயற்கையை எந்நாளும் பாதுகாக்கும் அரசாக இந்த அரசு இருக்கும் என்றார்.









