கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ஓப்பன்ஹைமர் இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மரை குறித்த படமாக உருவாகிறது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஓப்பன்ஹைமர் படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. சினிமா உலகின் மந்திரகாரன் என்று புகழப்படும் நோலன் படத்தின் சிறு அப்டேட்டும் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. Following படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான நோலன், தொடர்ந்து வெளியான தனது படங்கள் மூலம் தனக்கென தனி பாணியை உருவாக்கினார். இயற்பியல் விதிகளில் தொடங்கி விண்வெளியின் கருந்துளை வரை தனது படங்கள் வாயிலாக இயற்பியல் வகுப்பெடுத்தவர் கிறிஸ்டோபர் நோலன்.
பஞ்சாங்கத்தை கொண்டு ராக்கெட் விட்டதாக சில சினிமா பிரபலங்கள் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், விண்வெளி சார்ந்த தனது படத்திற்கு நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்களை உடன் வைத்து திரைக்கதை அமைத்து நம்மையும் விண்வெளிக்கே அழைத்து சென்றவர். இவர் இயக்கத்தில் வெளியான இன்டெர்ஸ்டெல்லர் விண்வெளி சார்ந்த படங்களில் காலத்தால் அழியாதது.
மேஜிக்கை வைத்து மேஜிக் செய்து ((The Prestige )), கனவுக்குள் கனவு என மாய வித்தை நிகழ்த்தியது ((INCEPTION Movie Best Scene)) என திரையில் வித்தைகள் நிகழ்த்தியவர். தற்போது இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மரைப் பற்றி படமெடுத்து வருகிறார். இதற்கு முன்பாக வெளியான இவரது படமான டெனெட் படத்தில், காட்சிகளை தத்ரூபமாக கொண்டுவரும் நோக்கில் ஒரிஜினலான விமானத்தை வெடிக்கச் செய்து அதை காட்சிப்படுத்தி சினிமா உலகையே ஆச்சர்யப்படுத்தினார். இந்நிலையில், அணுகுண்டு சார்ந்த இந்த படத்தில் என்ன செய்ய காத்திருக்கிறாரோ என்ற வகையில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ராபர்ட் டவுனி ஜூனியர், சிலியன் மர்பி, மேட் டேமன் என பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கியிருக்கும் கிறிஸ்டோபர் நோலன் நிகழ்த்த இருக்கும் மாயாஜாலத்தை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். ஓப்பன்ஹெய்மரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்துவரும் சூழலில் இந்தப் படம் அரசியல் ரீதியாகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-சந்தோஷ்








