கோடியக்கரையில் கடல் சீற்றம் – படகுகளை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ் பகுதி காரணமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.   வங்கக்கடலில் காற்றழுத்த நிலை,…

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ் பகுதி காரணமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

வங்கக்கடலில் காற்றழுத்த நிலை, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், தமிழ்நாட்டில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்து.

 

இந்நிலையில், நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது. கடல் சீற்றத்தால் கடற்கரையில் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மீனவர்கள் படகுகளை இழுவை டிராக்டர் மூலம் மேடான பகுதிகளுக்கு அவசர அவசரமாக கொண்டு சென்று நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கடற்கரை ஓரத்தில் மீன்பிடி வலைகள் அடுக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் சூழ்ந்ததால் மீன்பிடிவலைகளையும் வாகனம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். புயல் எச்சரிக்கை காரணமாக மீன்வளத்துறை எச்சரிக்கையை அடுத்து கோடியக்கரை,
ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணின்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

 

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சேடி காணப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.