பள்ளி மாணவி கடத்தல்: பைக்கை விட்டுவிட்டு இளைஞர் தப்பியோட்டம்

தேர்வு மையத்திற்கு அழைத்து செல்வதாகக் கூறி 10 ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை பொதுமக்கள் சந்தேகப்பட்டு விசாரித்ததையடுத்து, அந்த நபர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளம் அடுத்த குருவன்கோட்டையைச் சேர்ந்த…

தேர்வு மையத்திற்கு அழைத்து செல்வதாகக் கூறி 10 ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை பொதுமக்கள் சந்தேகப்பட்டு விசாரித்ததையடுத்து, அந்த நபர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குளம் அடுத்த குருவன்கோட்டையைச் சேர்ந்த மாணவி நல்லூர் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இன்று காலை 8 மணியளவில் மாணவி தேர்வு எழுத வீட்டில் இருந்து புறப்பட்டு ஆலங்குளம் மார்க்கெட் அருகே மினி பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் மாணவியிடம் நைசாக பேசி தேர்வு மையத்திற்கு அழைத்து செல்வதாகக் கூறியுள்ளார். மாணவியும் அந்த இளைஞரை நம்பி பைக்கில் ஏறியுள்ளார்.

பைக்கை அந்த இளைஞர் புதுப்பட்டி சாலைக்குத் திருப்பியதால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த பொதுமக்கள் பைக்கை மறித்து விசாரித்தபோது, அந்த இளைஞர் பைக்கை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து, மாணவி அணிந்திருந்த அடையாள அட்டையை வைத்து அப்பகுதியினர் பெற்றோரை வரவழைத்து மாணவியை பத்திரமாக தேர்வு எழுத அனுப்பிவைத்தனர். தப்பியோடிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆலங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.