ஷவர்மா சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தீவிர சிகிச்சை மருத்துவர் விஜய் சக்கரவர்த்தி விளக்கமளித்துள்ளார்.
ஷவர்மா இந்த வார்த்தை உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான சொல்… இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணும் ஒரு உணவு. குறிப்பாக, 2K கிட்ஸ் மற்றும் இளைய தலைமுறையினரின் மத்தியில் இதற்கு ஒரு தனி வரவேற்பே உண்டு . சென்னை, திருச்சி, மதுரை, போன்ற நகர பகுதிகளில் ஷவர்மா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. சிக்கன் ஷவர்மா, பீஃப் ஷவர்மா, போர்க் ஷவர்மா, மற்றும் வெஜிடபிள் ஷவர்மா மிகவும் பிரபலமானவை.
எல்லோரும் விரும்பி உண்ட ஷவர்மா விஷமான கதையை யாரும் கேட்டதில்லை. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த துயரத்தை கேரளா சந்தித்தது. கேரள மாநிலத்தில் ஷவர்மாவை சாப்பிட்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் இளைஞர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் விதைத்துள்ளது.
ஷவர்மா சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து தீவிர சிகிச்சை மருத்துவர் விஜய் சக்கரவர்த்தி விளக்கமளித்துள்ளார். ஷவர்மாக்களில் பயன்படுத்தபடும் மாமிசம் பழைய மாமிசமாக இருக்கும் போது அதில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறினார். அதில் பயன்படுத்தப்படும் மைனஸ் எனப்படும் பொருள் குளிர்ந்த நிலையில் வைக்கப்படவேண்டும்.
ஆனால், பல கடைகளில் இதுகுறித்த விவரம் தெரியாமல் அதனை வெளியில் வைத்து பயன்படுத்துகின்றனர். இதன் மூலமாகவும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஷவர்மா சாப்பிடுவதால் உடனடி அறிகுறியாக புட்பாய்சன் ஏற்படுவதுடன், எதிர்காலத்தில் பலவிதமான நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் கூறினார்.







