பள்ளி மாணவர் உயிரை மாய்க்க முயற்சி: ஆசிரியருக்கு நெஞ்சு வலி!

தாராபுரத்தில் பள்ளி மாணவர் உயிரிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக, உயிரிக்க தூண்டியதாக ஆசிரியரை போலீஸார் கைது செய்தபோது ஆசிரியருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல் நிலைய…

தாராபுரத்தில் பள்ளி மாணவர் உயிரிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக, உயிரிக்க தூண்டியதாக ஆசிரியரை போலீஸார் கைது செய்தபோது ஆசிரியருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் இயங்கிவரும் சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் திருப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவன் சிஎஸ்ஐ ஹாஸ்டல் விடுதியில் கடந்த 13ஆம் தேதி சேர்ந்து சிஎஸ்ஐ வளாகத்தில் இயங்கி வரும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவனுக்கு ஹாஸ்டலில் தங்கி படிப்பதற்கு
விருப்பமில்லை என தனது தாயாரிடம் கூறியுள்ளார். அதற்கு மாணவனின் தாயார் சிறிது நாட்கள் நீ இங்கு தங்கிப் படித்தால் உனக்கு ஹாஸ்டல் சுற்றுச்சூழல் பிடித்துவிடும். அதனால் நீ இங்கே படிக்க வேண்டும் என கூறி மாணவனை ஹாஸ்டலில் விட்டுச் சென்றுள்ளார். அதை கேட்டு மாணவன் அதே பள்ளியில் படிப்பைத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், சமூக அறிவியல் ஆசிரியர் பிரகாசம் ஜெயக்குமார் (50) என்பவர்
வகுப்பறையில் வைத்து மாணவர்கள் முன்னிலையில் மாணவனின் தாயாரைப் பற்றி தகாத வார்த்தையால் பேசி அசிங்கப்படுத்தி உள்ளார். அதனால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஜூலை 13ஆம் தேதி உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தனக்குத்தானே சார்ப்னார் பிளேடால் தனது இடது கை மற்றும் மணிக்கட்டில் உள்பகுதியில் கீரி கொண்டுள்ளார். இதனால், பெரும் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

அதிக ரத்தப்போக்கு காரணமாக மயக்கமடைந்த மாணவனை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்துள்ளனர். அதன் பிறகு மாணவன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இச்சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு மாணவனின் தாயார் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்தியதில் சம்பவம் உண்மை எனத் தெரியவந்தது.

எனவே, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குழந்தைகள் நல அலுவலர் ஜூலை 20ஆம் தேதி கொடுத்த புகாரின்பேரில், தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட பிரகாசம் ஜெயக்குமாரை கைது செய்வதற்காக போலீஸார் அவரது தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றனர். ஆனால், பிரகாசம் ஜெயக்குமாருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழப்புக்குப் பிறகு தாராபுரத்தில் பள்ளி மாணவனுக்கு ஏற்பட்ட சோகம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.