குடியரசுத் தலைவர் தேர்தல் – வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் வரும் 24ம் தேதியோடு முடிவடைய இருப்பதை ஒட்டி, புதிய குடியரசுத் தலைவரை…

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் வரும் 24ம் தேதியோடு முடிவடைய இருப்பதை ஒட்டி, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது.

இந்த தேர்தலில், குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற அலுவலகம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அன்றைய தினம் காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. 776 எம்பிக்கள், 4 ஆயிரத்து 33 எம்எல்ஏக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் 99 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப் பெட்டிகள் அனைத்தும் செவ்வாய் கிழமைக்குள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

தேர்தல் அலுவலரான மாநிலங்களவை செயலாளர் பி.சி. மூடியின் மேற்பார்வையின் கீழ் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

தற்போது எம்பிக்கள் செலுத்திய ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. எம்பிக்களின் ஓட்டு எண்ணி முடிக்கப்பட்டதும், அதன் முடிவுகளை தேர்தல் அலுவலர் பி.சி. மூடி இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களிடம் அறிவிப்பார்.

இதையடுத்து, அகர வரிசைப்படி மாநிலங்களில் எம்எல்ஏக்கள் அளித்த வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

முதல் 10 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் இரண்டாம் கட்ட தேர்தல் நிலவரத்தை பி.சி. மூடி மீண்டும் அறிவிப்பார்.

பிறகு அடுத்த 10 மாநிலங்களில் எம்எல்ஏக்கள் செலுத்திய ஓட்டுக்கள் எண்ணப்பட்டு புதிய தேர்தல் நிலவரம் குறித்த முடிவுகளை பி.சி. மூடி அறிவிப்பார்.

அந்த அறிவிப்புக்குப் பிறகு அனைத்து ஓட்டுக்களும் எண்ணப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியிடப்படும். இதன் மூலம், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

புதிய குடியரசுத் தலைவர் வரும் 25ம் தேதி பதவியேற்பார்.

ஆளும் கூட்டணிக்கு கூடுதல் ஆதரவு இருப்பதால், ராம்நாத் கோவிந்த்தின் இடத்தை நிரப்புபவராக திரெளபதி முர்வு இருப்பார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.