தமிழ்நாடு உளவுத்துறையின் ஐஜியாக செந்தில்வேலன் ஐபிஎஸ்யை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
“மருத்துவர் டூ உளவுத்துறை ஐஜி” யார் இந்த செந்தில்வேலன்? அவரது பின்னணியை
இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது.
தமிழக காவல்துறை உளவுத்துறை ஐஜியாக டாக்டர் செந்தில்வேலனை அரசு நியமனம் செய்து அறிவித்துள்ளது. இவர் 2004-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர் மதுரையை சேர்ந்தவர். மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். தொடர்ந்து 2004ம் ஆண்டு இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் 84வது இடத்தைப் பிடித்தார்.
மேலும் பயிற்சியின் போது செந்தில்வேலன் “சிறந்த ஒட்டுமொத்த தகுதி” என்று அங்கீகரிக்கப்பட்டு, பிரதமரின் பேட்டன் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ரிவால்வர் விருது பெற்றார். பேட்டன் மற்றும் ரிவால்வர் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க கவுரவமாகும்.
இவரது தந்தை தனியார் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி உள்ளார். தந்தை விருப்பத்திற்காக மருத்துவரானார். ஆனால் செந்தில்வேலனுக்கு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை. அதனால் மருத்துவராக பணியாற்றி கொண்டே இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். ஐஏஎஸ் வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் ஐபிஎஸ்ஸை தேர்வு செய்தார்.
தமிழக காவல்துறை ஐபிஎஸ் கேடராக தேர்வானார். ரராமநாதபுரம் மாவட்டம் கமுதியில்
முதன் முதலில் ஏஎஸ்பியாக பணியில் அமர்த்தப்பட்டார். சாதிக்கலவரங்கள் உடைய
மாவட்டத்தில் அதனை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டார். இதன் பிறகு சிதம்பரம் ஏஎஸ்பியாக மாற்றலானார். அங்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்டமோதலை கட்டுக்குள் கொண்டு வந்தது, சிதம்பரம் கோவில் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு கண்டதற்கு பாராட்டை பெற்றார்.
அதை தொடர்ந்து எஸ்பியாக பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக்கு சென்றார் செந்தில் வேலன். அங்கு ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கைகள், திருட்டு வழக்குகளை விரைந்து துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்வது போன்ற செயல்களால் பாராட்டுக்களை பெற்றார். மேலும் இரவு நேர ரோந்து பணி கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து தீவிர பணிகளை மேற்கொண்டார். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டார். தேர்தல் முடித்த பிறகு அதிமுக ஆட்சி வந்ததும் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டார்.
2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த கலவரம் தமிழகத்தையே உலுக்கியது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் இறந்தனர். எஸ்பியாக இருந்த செந்தில்வேலன் காயமடைந்தார். நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் பிறகு செந்தில்வேலன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் எஸ்பியாக இடமாற்றுதலுக்குள்ளானார்.
மதுரையில் கிரானைட் முறைகேடு தொடர்பான முக்கிய வழக்கை விசாரித்து அது தொடர்பான இடங்களில் சோதனை நடத்தினார். இதையடுத்து செந்தில்வேலன் மத்திய அரசு பணிக்கு (அயல் பணி) சென்று விட்டார். கடந்த 2018-ம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு அங்கேயே பணியை தொடர்ந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் ஐஜியாக பதவி உயர்வு பெற்ற செந்தில் வேலன் தற்போது மீண்டும் தமிழக காவல்துறைக்கே வந்துள்ளார்.
தமிழக காவல்துறையில் முக்கிய பொறுப்பான உளவுத்துறை ஐஜியாக செந்தில்வேலனை
தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. கள்ளக்குறிச்சி கலவரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கூடுதல் கவனம் செலுத்தி சட்டம் ஒழுங்கை பிரச்சினை ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செந்தில்வேலன் கையாளுவார் என்ற தகவலை தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
- ரா.சுப்பிரமணியன்









