பல்லி விழுந்த உணவை உண்ட பள்ளி குழந்தைகள்; மருத்துவமனையில் அனுமதி

கடலூர் அருகே அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால், வாந்தி மயக்கம் ஏற்பட்ட 17 குழந்தைகள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் ஊராட்சியிலுள்ள பூதங்கட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில்…

கடலூர் அருகே அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால், வாந்தி மயக்கம் ஏற்பட்ட 17 குழந்தைகள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் ஊராட்சியிலுள்ள பூதங்கட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இன்று வழக்கம்போல் அங்கு மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு, திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உணவை ஆய்வுசெய்தபோது, அதில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று 17 குழந்தைகளும், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆட்சியர் பாலசுப்ரமணியம், மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தைகளின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். மேலும், குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் அவர் ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அங்கன்வாடி பணியாளர் ஜெயசித்ரா மற்றும் உணவு சமையலர் அம்சவல்லி ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.