பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் – டெல்லி அமைச்சரவை ஒப்புதல்!

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும்  ‘மகிளா சம்ரிதி யோஜனா’ திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்று பாஜக பெரும்பான்மையாக வெற்றிபெற்று ரேகா குப்தா முதலமைச்சராக பதவியேற்றார். தேர்தலின்போது பெண்களுக்கு மாதம் ரூ.2,500 தருவதாக பாஜக வாக்குறுதி அளித்தது.

இந்த நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும்  ‘மகிளா சம்ரிதி யோஜனா’ திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் மகளிர் தினத்தையொட்டி  இன்று(மார்ச்.08) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரேகா குப்தா, “மகளிர் தினமான இன்று எங்கள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது, எங்கள் அமைச்சரவை இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி தேர்தலின் போது பெண்களுக்கு ₹ 2500 வழங்குவதாக நாங்கள் அளித்த வாக்குறுதி இது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக டெல்லி பட்ஜெட்டில் ₹ 5100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான பதிவும்  போர்டல் விரைவில் தொடங்கப்படும். இத்திட்டம் குறித்த அனைத்து தகவல்களும் அதில் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் அளவுகோல்கள் மற்றும் பிற விஷயங்களைத் தீர்மானிக்க கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட் மற்றும் பிரவேஷ் வர்மா ஆகிய 3 அமைச்சர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது” 

இவ்வாறு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.