பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கான மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான ஒரே மாதிரியான தேசிய கொள்கை குறித்த கருத்துக்களை அறிக்கையாக மத்திய அரசிடம் சமர்ப்பிக்காத மாநிலங்கள், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளின் மாதவிடாய் சுகாதாரத்தை நிர்வகிப்பதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக தேசிய மாதிரியை உருவாக்கவும், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) தயாரிக்கவும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் “மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரத்தை நிர்வகிப்பதற்கான சீரான தேசியக் கொள்கையை செயல்படுத்தும் நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி, ஹரியானா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே அறிக்கை அளித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எஞ்சிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தங்கள் பதில்களை (அறிக்கை) தாக்க செய்ய உத்தரவிட்டது. மேலும் விசாரணையை நவம்பர் இரண்டாம் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.







