திருக்கடையூரில் இசைஞானி இளையராஜாவுக்கு சதாபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூரில் அமிர்த கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு 80 வயதை நிறைவு செய்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா சதாபிஷேகம் செய்து கொள்வதற்காக வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோயில் கொடிமரத்தின் அருகே இளையராஜா கோ பூஜை, மற்றும் கஜ பூஜை செய்தார்.
தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நாளை காலை 6 மணி முதல் 8 மணிக்குள் இரண்டாம் கால பூஜைகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.




