அதிமுக கொடிகட்டிய கார்; ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காலை முதலே…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காலை முதலே அதிமுக, அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், மரியாதை செலுத்தினர். ஆதரவாளர்கள் புடை சூழ, அதிமுக கொடி கட்டிய காரில் வருகை தந்த சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றும், மீண்டும் மக்களின் மனங்களை வெல்வோம். மீண்டும் உருவாக்குவோம் வளமான தமிழகத்தை என்றும் சசிகலா உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், ஜெயலலிதா நினைவிடத்தில் ஆதரவாளர்கள் புடைசூழ, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ஏராளமான அமமுக தொண்டர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் தினகரன் தலைமையில் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக, ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், மரியாதை செலுத்தினார். உடல்நலக்குறைவால் தீபா வர இயலவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மரியாதை செலுத்தினார். அப்போது, வேதா இல்லம் ஒப்படைக்கப்பட்டதற்கான ஆவணங்கள் அடங்கிய கோப்பை, ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.