முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசியலில் சசிகலா 2.0..?

மதுசூதனனின் உடல்நலம் விசாரித்த வி.கே.சசிகலா – அரசியலாக பார்க்கமால் அரசியல் பண்பாடாகவே பார்க்க வேண்டிய ஒன்று.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் தொடங்கி சமகாலத்திலும் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் அவைத்தலைவர் மதுசூதனன். அதிமுகவுடன் ரத்தமும் சதையுமாக இருந்த மதுசூதனன் எம்.ஜி.ஆரால் அஞ்சா நெஞ்சன் என அழைக்கப்பட்டவர். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கட்சியின் மூத்த முன்னோடி என்ற அடிப்படையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உடல்நிலை குறித்து விசாரிப்பது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படும் போது பல ஆண்டுகளாக தனக்கு பாதுகாப்பாக இருந்த மதுசூதனனை சசிகலா சந்தித்திருப்பது தான் தற்போது தமிழ்நாட்டின் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

உடல்நிலை குறித்து விசாரிக்க நடைபெற்ற மதுசூதனன் – சசிகலா சந்திப்பு அரசியல் ரீதியாக ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதிமுகவின் அதிகாரப்பிடி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் கையில் இருக்கிறது. அதிமுகவிற்குள் நுழைய சசிகலா தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தாலும் அதற்கு இந்த சந்திப்பு ஒரு பலனும் அளிக்கப்போவதில்லை. சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த மூத்த தலைவர் மதுசூதனன். இருந்தாலும் மருத்துவமனைக்கு சென்று மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரித்திருப்பது சசிகலா மீதான அதிமுகவினர் நம்பகத்தன்மை அதிகரிக்கச் செய்யும் என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி

அரசியல்வாதிகளின் நகர்வுகளுக்கு பின்னர் அரசியல் இருக்கும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால் இதனை வெறுமனே அரசியலாக மட்டும் பார்க்காமல் அரசியல் பண்பாடாக பார்ப்பது சரியாக இருக்கும் என்பது மூத்த பத்திரிகையாளர்களின் கருத்து. காரணம் அரை நூற்றாண்டு காலமாக அதிமுகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் மதுசூதனன். எனவே அவரின் உடல்நிலை குறித்து விசாரிக்க நடைபெற்ற இந்த சந்திப்பை அரசியலாக பார்க்க கூடாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என போயஸ்தோட்டத்தில் கைகூப்பி நின்றவரின் உடல்நிலையை விசாரிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வியும் பரவலாக எழுவதை பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் பாதுகாப்பு அரணாக மதுசூதனன் திகழ்ந்திருக்கிறார். மதுசூதனன் உடல்நிலையை அறிந்து கொள்ள சசிகலா மருத்துவமனைக்கு சென்றது வரவேற்கத்தது என்றாலும் இது அரசியலுக்காக நடைபெற்ற சந்திப்பா அல்லது மனிதாபிமான அடிப்படையில் நடைபெற்ற சந்திப்பா என்ற முடிவை மக்கள் எடுப்பதே சிறந்தாக இருக்கும்

 

கட்டுரையாளர்: விக்னேஷ், நியூஸ் 7 தமிழ் சென்னை

Advertisement:
SHARE

Related posts

ரஷியாவில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்கு!

Gayathri Venkatesan

பாமக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பல்!

Halley karthi

“பொடா”வை சந்தித்த போராளி

Vandhana