தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், மகாராஷ்டிர துணை முதலமச்சர் அஜீத் பவாரும் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது அந்த மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகிய அஜித் பவார், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து அனைவரையும் கட்சியை விட்டு நீக்குவதாக சரத்பவார் அறிவித்திருந்தார். தங்களுக்கு தான் எம்எல்ஏக்களின் ஆதரவு அதிகம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அஜித் பவார் உரிமையும் கோரியிருந்தார். பின்னர் மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக சரத் பவாரை அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது கட்சியில் பிளவு வேண்டாம் என்றும் ஒற்றுமையுடன் செயல்படலாம் என்று அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. சரத் பவார் தங்களுடன் இணைய வேண்டும் என்று அஜீத் பவார் தலைமையிலான அணியினர் அவரை இருமுறை சந்தித்து வலியுறுத்தினர். ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவிர்க்க வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை சரத் பவார் ஏற்கவில்லை.
இந்நிலையில், புணேயில் சரத் பவாரும், அஜீத் பவாரும் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. பின்னர் இந்த சந்திப்புக்கு பிறகு நேற்று அதிகாலை 5 மணியளவில் சரத் பவார் அந்த வீட்டில் இருந்து வெளியேறினார். அதைத் தொடா்ந்து, 6.45 மணியளவில் அஜீத் பவார் வெளியேறினார்.
கட்சி உடைந்த பிறகு இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்புகள் வெளிப்படையாக இருந்த நிலையில், இப்போது ரகசிய சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதனால், அவர்கள் இருவரில் யாராவது ஒருவர் அணி மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜீத் பவாரை இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்க அழைத்து வரும் நோக்கில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்று சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சரத் பவார் செய்தியாளா்களிடம் கூறியதாவது, “நான் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் என்று எனது நலம் விரும்பிகள் சிலர் கேட்டுக் கொண்டனர். ஆனால், பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கைகோர்க்காது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். கட்சியின் தலைவராக எனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என்பது எங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்புடையதல்ல.
கட்சியில் சிலர் தவறான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதனால் எனது கொள்கையில் மாற்றம் ஏற்படாது. எனினும் அவர்கள் என்னைத் தொடர்ந்து சந்தித்து தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர். அஜீத் பவாா் எனது நெருங்கிய உறவினர். நாங்கள் இருவரும் சந்தித்துப் பேசுவதில் எவ்வித தவறும் இல்லை” இவ்வாறு தெரிவித்தார்.