நடிகை சமந்தா, வெப் தொடரில் இலங்கை தமிழ்ப் பெண்ணாக நடித்துள்ளதாக அதன் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, நீரஜ் மாதவ் உட்பட பலர் நடித்த வெப் தொடர், ஃபேமிலி மேன். ராஜ் மற்றும் டீகே இயக்கி இருந்த இந்த தொடர் அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இதன் அடுத்த பாகம் ’ஃபேமிலி மேன் 2’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.
இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோருடன் நடிகை சமந்தாவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதனால் இந்த தொடருக்குத் தென்னிந்தியாவிலும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரில் நடிகை சமந்தாவை நடிக்க வைத்தது ஏன் என்று இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, இந்த தொடரில் ஒரு தமிழ் நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்தோம். இதற்காக சில நடிகைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, சமந்தாவிடம் கேட்கலாம் என நினைத்தோம்.
அவர் இந்த கேரக்டரை சரியாக செய்வாரா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால், சமந்தா அதில் உறுதியாக இருந்தார். அவர் இலங்கை தமிழ்ப் பெண்ணாக இதில் நடித்திருக்கிறார். சில கடினமான ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறார் என்றார்.
இந்த தொடர் எப்போதோ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், கொரோனா காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப் போய் இருக்கிறது.
இதையடுத்து நடிகை சமந்தா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதியுடன், காத்து வாக்குல ரெண்டு காதல், குணசேகர் இயக்கும் சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.







