ஓமலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானை மற்றும் மண்பாண்ட பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. பானை விலையும் விற்பனையும் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில்
நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் பொங்கல் பானை, சட்டி மட்டுமின்றி விதவிதமான அகல் விளக்குகள்,மண் அடுப்பு, குடிநீர் ஜாடிகள்,
திருஷ்டி பொம்மைகள் மற்றும் சிறு சிறு சுவாமி சிலைகள் தயார் செய்கின்றனர்.
பொங்கல் பண்டிகையில் மக்கள் அனைவரும் மண்பாண்டங்களை வாங்கி சமைப்பது, பொங்கல் வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதே போல் பண்டிகை காலத்தில் சோறு, கறி குழம்பு எதுவானாலும் மண்பானை சட்டியில் சமைத்து சாப்பிட்டுவது வழக்கம். இந்த நிலையில், இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடும் நிலையில், மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது. மண் பானை 250 ரூபாய்க்கும், சட்டி150 ரூபாய்க்கும் விற்பனை செய்யபடுகிறது.
மேலும், பல்வேறு மண்பாண்ட பொருட்களும் நூறு ரூபாயில் துவங்கி
500 ரூபாய் வரை விற்பனை செய்யபடுகிறது. பொங்கல் வைப்பதற்கான மண் அடுப்பு 250
ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனைக்கு வைத்துள்ளனர். சென்ற ஆண்டு விற்பனை
செய்த விலையை விட சற்றே விலை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் நடப்பாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
அதனால், பொங்கல் பானை விற்பனை அதிகரித்துள்ளது. இந்த மண்பாண்ட பொருட்களின் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்யம் அதிகரிப்பதால், அனைவரும் மண்பாண்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனால், மக்கள் ஒவ்வொருவரும் பாரம்பரிய மண்பாண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தி இந்த ஆண்டு சிறப்புடன் பொங்கலை கொண்டாட வேண்டும் என்றும் கூறினர்.








