சேலம் காவல் துறை அதிகாரிகளுக்கு தலா ரூ.50ஆயிரம் அபராதம்-மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பு

சேலம் உதவி ஆணையர் நாகராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சின்னசாமி ஆகிய இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனித உரிமைகள் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்தது. சேலத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவரையும்,…

சேலம் உதவி ஆணையர் நாகராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சின்னசாமி ஆகிய இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனித உரிமைகள் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்தது.

சேலத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவரையும், இவரது கணவர் முத்துசாமி ஆகிய இருவரையும் அப்போது கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளராக இருந்த நாகராஜ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சின்னசாமி ஆகியோர் சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து மனித உரிமைகளை மீறி தாக்கியதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பரமேஸ்வரி புகார் அளித்தார்.

இந்தப் புகார் அடிப்படையில் வழக்கை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சர்ஜத் நயினாமுகமது மற்றும் சங்கர், மஞ்சுளா ஆகியோர் நடத்தி வந்தனர். வாதப் பிரதிவாதங்களை ஆய்வு செய்த பின் மனித உரிமை ஆணையத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில், சேலம் காவல் துறை உதவி ஆணையராக பதவி வகித்து வரும் நாகராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சின்னசாமி ஆகியோருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவில், அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் புகார்தாரர் பரமேஸ்வரிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக உத்தரவு பெறப்பட்ட நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், பணம் செலுத்திய பிறகு, தமிழ்நாடு அரசு, பதிலளித்த இருவரிடமிருந்து தலா ரூ.25 ஆயிரம் திரும்பப் பெறலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, பதிலளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.