தேனி சிறுமி உயிரிழந்த விவகாரம்: நீதி கிடைக்கவில்லை என பெற்றோர் வேதனை

தேனி ஓடைப்பட்டியில் பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் 5 நாட்கள் ஆகியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்கா அமைப்பதற்காக…

தேனி ஓடைப்பட்டியில் பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் 5 நாட்கள் ஆகியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட சுமார் 7 அடி பள்ளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 வயது சிறுமி ஹாசினி ராணி எதிர்பாராத விதமாக விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து நியூஸ்7 தமிழ், செய்தி ஒளிபரப்பிய பின், சிறுமியின் தந்தையை மாவட்ட ஆட்சியர் சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், சம்பவம் நிகழ்ந்து 5 நாட்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்த வழக்கை சிஆர்பிசி 174 என்று சொல்லக்கூடிய காரணம் தெரியாத உயிரிழப்பு என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டிளித்த சிறுமியின் பெற்றோர், தங்கள் மகள் இறந்ததற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். மேலும், அலட்சியமாக இருந்த ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர். இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாத வண்ணம் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.