கஞ்சா விற்பனை; மதுரையில் 8 மாதத்தில் 248 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை மாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 8 மாதத்தில் 248 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்களின் விற்பனையை…

மதுரை மாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 8 மாதத்தில் 248 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்குத் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு காவல்துறை இயக்குநரின் உத்தரவின் பேரில் மதுரை மாநகர காவல் ஆணையரின் தீவிர கண்காணிப்பில் மதுரை மாநகர காவல்துறையால் கஞ்சா விற்பனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள தகவலில், நடப்பு ஆண்டில் மட்டும் 274.137கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 248 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 137 கஞ்சா விற்பனையாளர்கள் மீது நன்னடத்தை தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிணையப் பத்திரத்தை மீறிய நபர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டு உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தகத்தைச் சோதனை செய்து அங்கிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு, மேற்படி மருந்தகம் சீல் வைக்கப்பட்டதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மருந்தகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘ஆடர் செய்தது ஐஸ்கிரீம்; வீட்டிற்கு வந்தது என்ன தெரியுமா?’

தொடர்ந்து இந்த வருடம் 4 வணிக அளவு கஞ்சா வழக்குகளில் நீதிமன்ற விசாரணையில் கவனம் செலுத்தி 13 குற்றவாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மதுரை மாநகர காவல் துறை, மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை செய்யும் 68 குற்றவாளிகளின் சுமார் 67 இலட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் கண்டறியப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 8 கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்களின் அசையா சொத்துக்கள் முடக்க நடவடிக்கைக்காக இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.