2022-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கும், யுவபுரஸ்கார் விருது எழுத்தாளர் காளிமுத்துவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதேபோல் இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்), சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கும் (பால சாகித்ய புரஸ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு செப்பு பட்டயத்துடன், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படும்.
2022ஆம் ஆண்டுக்கான பால புரஷ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டெல்லியில் சாகித்ய அகாடமியின் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதன் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொழி வாரியாக மூன்று நடுவர்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட நூல்களின் அடிப்படையில் விருதுகளுக்கான நூல்களும், எழுத்தாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பஞ்சாப் மொழியை தவிர்த்து, பிற மொழிகளில் நூல்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழ் மொழிக்கான 2022ம் ஆண்டு சாகித்ய அகாடமி பால சாகித்யா புரஸ்கார் விருது ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார விருது, ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதை தொகுப்புக்காக எழுத்தாளர் ப.காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வரும் நவம்பர் 14 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. அப்போரு விருது பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும், விருதும் வழங்கப்படும்.







