சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர்கள்!

மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் உதயசங்கருக்கும், சாகித்ய அகாடமி யுவ புராஸ்கர் விருது எழுத்தாளர் ராம் தங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில்…

மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் உதயசங்கருக்கும், சாகித்ய அகாடமி யுவ புராஸ்கர் விருது எழுத்தாளர் ராம் தங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் சாகித்திய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு மொழிகளில் குழந்தை இலக்கியம் படைப்பவர்களுக்கு சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. சாகித்ய அகாடமி யுவ புராஸ்கர் விருது இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 35 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை அங்கீகரிக்கிறது.

சாகித்ய அகாடமி பால சாகித்ய புரஸ்கார் விருதுக்காக எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ஆதனின் பொம்மை நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி யுவ புராஸ்கர் விருது எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் சிறுகதை நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த எழுத்தாளர்களை பற்றி இங்கே காணலாம்:

எழுத்தாளர் உதயசங்கர்:

இவர் 1960ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பிறந்தவர். இவர் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர். ரயில்வேயில் பணி செய்தவர். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்.

இவர் சிறுகதை நூல்கள், குறுநாவல், கவிதை நூல்கள், குழந்தை இலக்கியம், மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு,  ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு மற்றும் கட்டுரை நூல்கள் என பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவர் தமுஎகச புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை நூல் விருது, உலகத்தமிழ் பண்பாட்டு மைய விருது, விகடன் சிறுவர் இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

எழுத்தாளர் ராம் தங்கம்:

இவரது இயற்பெயர் த.ராமு. விகடன் இதழில் வேலை செய்த போது த.ராம் என்கிற பெயரில் எழுதினார். ராம் தங்கம் என்பது கதைகள் எழுதத் தொடங்கிய பின் இவர் வைத்துக்கொண்ட பெயர். 1988ம் ஆண்டு பிறந்த இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் இளங்கலை வரலாறு பட்டமும், டிப்ளமோ இன் மீடியா ஆர்ட் பட்டமும் பெற்றவர்.

இவர் தினகரன், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். இப்போது முழுநேர எழுத்தாளராக தனது எழுத்துப் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவரது முதல் புத்தகமான ‘காந்திராமன்’ வெளிவந்தது. இவர் தெற்கு எழுத்தாளர் இயக்க விருது, அசோகமித்திரன் விருது, சுஜாதா விருது, வடசென்னை தமிழ் இலக்கிய விருது, சௌமா இலக்கிய விருது, படைப்பு இலக்கிய விருது, அன்றில் இலக்கிய விருது, கவிஞர் மீரா விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.