முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஊரக உள்ளாட்சித் தேர்தல்; சிறுத்தைகளுக்கு கிடைத்த பேரங்கீகாரம்” – விசிக

கடந்த 6 மற்றும் 9ம் தேதி தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்றும் நீடித்து வருகின்ற நிலையில், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது என்றும், இது நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று என்றும், சிறுத்தைகளுக்கு கிடைத்த பேரங்கீகாரம்.” என்றும் விசிக தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அக்டோபர் 06, 09 ஆகிய நாட்களில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில், ஒன்றியக் குழு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கான சில தொகுதிகளில் விசிக போட்டியிட்டது. அவற்றில் கணிசமான இடங்களில் அனைத்துத் தரப்பு மக்களின் நல்லாதரவோடு வெற்றி வாகை சூடியுள்ளது.

மாவட்டக்குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட நான்கில் மூன்று தொகுதிகளிலும், ஒன்றியக் குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட 43இல் 27 தொகுதிகளிலும் விசிக வெற்றி பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும் வெற்றிக்கு அரும்பாடுபட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கூட்டணியை இணக்கமாகவும் வெற்றிகரமாகவும் வழிநடத்தி சட்டமன்றத் தேர்தலில் சாதித்ததைப் போலவே இத்தேர்தலிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் எமது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மகத்தான வெற்றி திமுக அரசின் நல்லாட்சி நிர்வாகத்துக்கும், திமுக தலைமையிலான கூட்டணியின் நல்லிணக்கத்துக்கும் மக்கள் வழங்கியுள்ள நற்சான்றாகும். அத்துடன், சாதியவாத மதவாத, சனாதனப் பிற்போக்கு சக்திகளின் அபாண்டமான அவதூறுகளை, மக்கள் தமது வாக்குகளால் தகர்த்தெறிந்து மீண்டும் விசிகவை அரவணைத்து அங்கீகரித்துள்ளனர் என்பதற்கான சிறப்புச் சான்றாகும்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் விசிகவுக்கு மாபெரும் அங்கீகாரத்தை வழங்கி மைய நீரோட்ட அரசியலில் விசிக ஒரு மகத்தான சக்தி என்பதை மீளுறுதி செய்துள்ள எம் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு உளங்கனிந்த நன்றி.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகினார் மியான்மர் வீரர்

Halley karthi

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் – அமைச்சர் அறிவிப்பு

Saravana Kumar

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!

Ezhilarasan