நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்துவந்த லோக்சபா மற்றும் ராஜ்யசபா தொலைக்காட்சிகளை ஒன்றிணைத்த ‘சன்சாத்’ என்ற புதிய தொலைக்காட்சியை மத்திய அரசு இன்று உருவாக்கியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் நாடாளுமன்ற செயல்பாடுகள், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் முக்கிய அறிவிப்புகள், நாடாளுமன்ற விவாதங்கள் ஆகியவற்றை லோக்சபா மற்றும் ராஜ்யசபா தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்துவந்தன.
நாடாளுமன்ற நிகழ்வுகளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கடந்த 2004-ம் ஆண்டு லோக்சபா தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள Parliament Library Building (PLB) இந்த தொலைக்காட்சி செயல்பட்டுவந்தது. இதில் மக்களவை நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுவந்தன.
அதேபோல் மாநிலங்களவை நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு ராஜ்யசபா தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. Gurudwara Rakab Ganj Road and Talkatora Stadium Annexe Building (TKSA) கட்டடத்தில் ராஜ்யசபா தொலைக்காட்சி செயல்பட்டு வந்தது.
இந்திய நாடாளுமன்றத்தில், மன்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப இரண்டு தொலைக்காட்சிகள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் நடைபெறும்போது இவ்விரு தொலைக்காட்சிகளின் பங்கு முக்கியமானது.
இந்நிலையில் நாடாளுமன்ற நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா தொலைக்காட்சிகளை இணைத்து சன்சாத் டிவியில் என்ற புதிய தொலைக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜ்யசபா தொலைக்காட்சி இனிவரும் நாட்களில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள (PLB) கட்டடத்தில் லோக்சபா தொலைக்காட்சி செயல்பட்டுவந்த இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளது.
இந்த இரண்டு தொலைக்காட்சிகளையும் ஒன்றிணைக்க, குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடுவும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் இணைந்து பிரசார் பாரதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சூர்ய பிரகாஷ் தலைமையில் குழு ஒன்றைக் கடந்த ஆண்டு அமைத்தனர். இந்தக் குழு இரண்டு தொலைக்காட்சிகளையும் இணைப்பது குறித்து ஆராய்ந்து சென்ற மாத அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இந்நிலையில் இன்று (02.03.2021) இரு தொலைக்காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இணைக்கப்பட்ட இந்த தொலைக்காட்சிக்கு ‘சன்சாத் டி.வி’ (SANSAD TV) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ,எஸ் அதிகாரியான ரவி கபூர், இந்த தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வருட காலம் அல்லது மறு உத்தரவு வரும்வரை அவர் சன்சாத் டிவியின் தலைமைச் செயல் அதிகாரியாகச் செயல்பட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மக்களவை செயல்படும் போது அதன் நேரலையை மக்களவைத் தொலைக்காட்சியிலும், மாநிலங்களவையின் நடவடிக்கைகளை மாநிலங்களவைத் தொலைக்காட்சியிலும் வழக்கம் போல ஒளிபரப்பும். அதே வேளையில், இரு அவைகளின் கூட்டு நடவடிக்கை மற்றும் அவை நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில், இரண்டு தொலைக்காட்சிகளிலும் ஒரே நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். மக்களவையில் ஒரு நிகழ்ச்சி இந்தியிலும், மாநிலங்களவையில் அதே நிகழ்ச்சி ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







