புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் அம்மாநில அமைச்சர்கள் சாய் சரவணன்குமார், நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜோதி வள்ளலாரின் பிறந்த நாள், மகாத்மா காந்தியின் 153வது பிறந்த தினம் மற்றும் நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
சித்தன்குடி பகுதியில் உள்ள நாடார் உறவின்முறை சங்கம் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷின் வீதி, தின நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடலூர் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலையில் முடிவடைகிறது. ஊர்வலத்தை ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி தொடங்கி வைத்தார்.
மேலும் ஊர்வலத்தில் புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் சாய் சரவணன்குமார், நமச்சிவாயம், நியமன சட்டமன்ற உறுப்பினர் அசோக் பாபு, பாஜக ஆதரவு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தை தொடர்ந்து ஏஎஃப்டி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமைச்சர் சாய் சரவணன்குமார் உளட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்து அணிவகுப்பில் பங்கேற்றனர்.
-இரா.நம்பிராஜன்








