மாமனிதன் வைகோ ( The Real Hero ) என்ற ஆவணப் படத்தை நாளை மறுநாள் செப்டம்பர் 11ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.
ஆதாயம் தேடாத அரசியல் பணியில் 56 ஆண்டுகள் சமரசம் இல்லா மக்கள் நலனில் – மாமனிதன் வைகோ ( The Real Hero ) எனும் ஆவணப் படத்தை தயாரித்துள்ளார் துரை வைகோ. நாளை மறுநாள் மாலை 5 மணி அளவில் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவணப் படத்தை வெளியிடுகிறார்.
வைகோவின் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், முத்தரசன் கே.பாலகிருஷ்ணன், காதர் மொய்தின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை காக்க அன்று எங்கள் இயக்க தந்தை வைகோவின் நடைபயணம்… அவரின் தியாகங்களை பறைசாற்ற இன்று எனது திரை பயணம் என அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளார் மதிமுகவின் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ.
இந்தி எதிர்ப்பு போராட்டம், சீமைக்கருவேல மரங்கள் அகற்றம், காவிரி நதி நீர் உரிமை பாதுகாப்பு நடைபயணம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், ஈழத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டம், மூவர் தூக்குக்கு தடை பெற்றது, நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மதுவிலக்கு நடைபயணம், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, அணு உலை எதிர்ப்பு என வைகோ தம் பொதுவாழ்வில் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கைகள் அனைத்தும் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா








