ரூ.8,045 கோடி மோசடி – சுரானா குழுமத்தில் மேலும் 3 பேர் கைது

இந்தியாவில் 8045 கோடி ரூபாய் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் சுரானா குழுமத்தைச் சேர்ந்த மேலும் 3 பேரை குற்றப்பிரிவு புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.   இந்தியா முழுவதும் சுரானா…

இந்தியாவில் 8045 கோடி ரூபாய் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் சுரானா குழுமத்தைச் சேர்ந்த மேலும் 3 பேரை குற்றப்பிரிவு புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

 

இந்தியா முழுவதும் சுரானா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் பாரிமுனையில் சுரானா நிறுவனம் இயங்கி வருகிறது. தினேஷ் சந்த் சுரானா மற்றும் விஜய்ராஜ் சுரானா ஆகியோர் இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்து வந்தனர். இந்தியாவில் தங்கம் மற்றும் எஃகு இறக்குமதியில் ஈடுபட்டிருந்த சுரானா நிறுவனத்தில், 2012ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தியது . சுரானா அலுவலக லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ தங்க கட்டிகள், நகைகள் அப்படியே சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து சுரானா மற்றும் எம்எம்டிசி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

 

கடந்த 10 ஆண்டுகளாக இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்தி வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினரும் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, ராகுல் சுரானாவின் தந்தை தினேஷ் சந்த் சுரானா மற்றும் விஜய்ராஜ் சுரானா ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர்.

 

இதனையடுத்து சுரானா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் சுரானா மீது சென்னை தீவிர குற்றத்தடுப்பு பிரிவும் வழக்கு பதிவு செய்தனர். ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி வழக்குகளை விசாரிக்கும் இந்த பிரிவு நடத்திய விசாரணையில், சுரானா நிறுவனத்தின் பெயரில் போலியான கிளை நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருவதும் அதன் பெயரில் பொதுத்துறை வங்கிகளில் ரூபாய் 8,045 கோடி கடன் பெற்று செலுத்தப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.

இதனால், கடந்த ஜூலை 26 ஆம் தேதி சுரானா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் பாஜக மாநில நிர்வாகியுமான ராகுல் சுரானா வங்கி கடன் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தீவிர குற்றப்பிரிவு புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில், வங்கி மோசடியில் தொடர்புடைய மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர்.

 

குறிப்பாக சுரானா குழுமத்தின் இயக்குனர் தினேஷ் சந்த் சுரானா, அவரது சகோதரர் விஜயராஜ் சுரானா நிறுவனத்தின் ஆடிட்டர் தேவராஜன் ஆகியோரையும் தீவிர குற்றப்பிரிவு புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. வங்கியில் இருந்து வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை போலி ஆவணங்களை தயாரித்து ரொக்கமாக பல போலி நிறுவனங்களுக்கு பணப்பரிமாற்றம் செய்த விவகாரத்திலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.