மத்திய பிரதேச மாநிலத்தில் மின்கட்டணமாக ரூ.3,419 கோடி என்ற பில் தொகையை கண்டு அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் சிவ் விஹார் காலனியில் வசித்து வருபவர் பிரியங்கா குப்தா. இவருக்கு மின்கட்டணம் ரூ.3,419 கோடி செலுத்த வேண்டும் என பில் வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மின்சார வாரியத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சஞ்சீவ் கன்கனே செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் வீட்டிற்கு ரூ.3,419 கோடிக்கு மின்கட்டணம் வந்துள்ளது. இவ்வளவு பெரிய மின்கட்டண தொகையை பார்த்து என் தந்தை மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து மின்வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மாநில மின் வாரியம் இதனை சரிசெய்துள்ளது என கூறினார்.
இந்த பிரச்னை குறித்து மத்திய பிரதேச மின்வாரியத்தின் பொது மேலாளர் நிதின் மங்லிக் கூறும்போது, ஊழியர்களின் கவனக்குறைவால் இந்த தவறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஊழியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யூனிட்டுகளுக்கு பதிலாக நுகர்வோரின் எண் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஊழியரின் கவனக்குறைவால், இவ்வளவு கூடுதல் தொகை பில்லில் வந்துள்ளது. இதன்பின்னர், ரூ.1,300 என்ற சரியான தொகையுடன் கூடிய பில் மின் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு விட்டது என அவர் கூறியுள்ளார்.







