கர்நாடக மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மே மாதம் 20ம் தேதி பதவியேற்றது.

கர்நாடகா மாநில சட்டப் பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து இருந்தது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக, கடந்த ஜூன் 2ஆம் தேதி முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிடப்பட்டன.
அதன்படி வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, பசுவதை தடைச் சட்டம் ரத்து என பல அதிரடியான அறிவிப்புகளை கர்நாடக மாநில அரசு அறிவித்திருந்தது. மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை போன்றே கர்நாடகத்திலும் மகளிர் உரிமைத் தொகைக்கான அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் ‘குடும்பலட்சுமி’ திட்டத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி தொடக்கிவைத்தார். ‘குடும்பலட்சுமி’ திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ராகுல் காந்தி தொடக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலமாக 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த விழாவில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.







