குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.  கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. தனது…

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தால், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியிருந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பிரசாரத்துக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று கூறினார். இதனையடுத்து, அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.  இந்த திட்டத்தை செயல்படுத்துவது, விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நிதித்துறை, வருவாய்த் துறை, சமூக நலத்துறை அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உரிமைத் தொகை வழங்குவதற்கான தகுதிகளை இறுதி செய்வது, உரிமைத் தொகைப் பெற பெண்கள் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், உரிமைத்தொகையை மாதந்தோறும் மகளிருக்கு வழங்கும் முறை என பல்வேறு நடைமுறைகள் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.