ரூ.100 கோடி நிலமோசடி புகார்.. விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களின் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை!

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை…

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் ரூ.100
கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆட்களை வைத்து மிரட்டி, போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்துக் கொண்டதாக, கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். இந்நிலையில், தன்மீது இப்படி ஒரு புகார் கொடுக்கப்பட இருப்பதை உணர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார். அதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் தலைமறைவானார்கள்.

இதற்கிடையில் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், தொழிலதிபர் பிரகாஷ் தனது மகள் சோபனாவுக்கு தான செட்டில்மெண்டாக எழுதிக் கொடுத்த ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் பத்திரப் பதிவு செய்ததாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் 7 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார். 3 முறை இந்த மனு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த 25-ஆம் தேதி முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரகாஷ்

இதனையடுத்து வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்ளிட்டோர் மீது
மீது 6 பிரிவுகளில் வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்பிணை கேட்டு கரூர் முதன்மை நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர்கள் மூலம் மனுத்தாக்கல் செய்தார். விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர். நிலமோசடி தொடர்பாக வழக்கு பதிவாகியுள்ள நிலையில் விஜயபாஸ்கர் ஆதரவாளர்களின் வீடுகளில் இன்று காலை முதலே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரூர் தாளப்பட்டியில் யுவராஜ் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். வேலாயுதம் பாளையத்தில் உள்ள செல்வராஜ் என்பவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.