”ராஜரீதியான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக…” – அனைத்து கட்சி கூட்டத்தில் நடந்ததை விவரித்த எம்.பி திருச்சி சிவா!

பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசிக்க மத்திய அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு எம்.பி. திருச்சி சிவா பேட்டியளித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம்  நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆளும் பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்றது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் எம்.பி திருச்சி சிவா பங்கேற்றார்.

கூட்டத்திற்கு பிறகு எம்.பி திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ”நாடு என்ற ஒரே உணர்வோடு எல்லோரும் ஒன்றுபட்டு நிற்கிறோம். இந்த படுபாதக செயல் இனியும் தொடரக்கூடாது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும்  தமிழ்நாடும் திமுக அரசும் நிச்சயமாக துணை நிற்கும் என்ற கருத்தை முன் வைத்தேன். காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் இந்த செயலை கண்டித்தது. எல்லோரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் இதில் பாகுபாடு இல்லை. அனைத்து கட்சி கூட்டத்தில் பஹல்காமில் நடந்த தாக்குதலை விவரித்தார்கள்.

பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். இது மத்திய அரசின் கடமை. இப்போது சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் மீது மேற்கொண்டுள்ளனர். மத்திய அரசு ராஜரீதியான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக மேற்கொண்டு வருகிறது.  இன்னும் அரசு இந்த திசையில் பயணிக்கும் காரணம் ஏற்பட்டிருக்கும் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது. தாக்குதல் குறித்த உளவுத்துறை ஆய்வுகள் குறித்து எதுவும் சொல்லவில்லை. பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் சமயம் வரும்போது வெளியில் வருவார்கள்.

ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்கு பின்பு இந்த தாக்குதல் நடந்துள்ளது. அரசாங்கம் இதில் கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம். நாடளுமன்றத்தில் விவாதிக்கபடுவதுபோல் விரிவாக விவாதிக்கப்படும் இடம் அல்ல இந்த கூட்டம். கவலைகளையும் எதிர்பார்ப்பையும் தெரிவித்து இருக்கிறோம். ஒத்துழைப்பை உறுதி செய்திருக்கிறோம்”

இவ்வாறு எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.