நெல்லை நாங்குநேரி அருகே ரவுடி நீராவி முருகன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் உள்ள நீராவி தெருவில் வசித்து வந்த பிரபல ரவுடி நீராவி முருகன் மீது கொலை, கொள்ளை ஆள்கடத்தல் என 60 க்கும் மேற்பட்ட பல்வேறு
வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில்,திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி மருத்துவர் சக்திவேல் வீட்டிலுள்ளவர்களை கட்டிப்போட்டு, 280 சவரன் நகைகள், 25 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்ற வழக்கில் முக்கிய குற்றவாளியாக ரவுடி நீராவி முருகனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
நாங்குநேரி பகுதியில் ரவுடி முருகன் பதுங்கி இருப்பதை அறிந்து போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடி முருகன் போலீசாரை அரிவாளால் வெட்டி தப்பமுயன்றதாக
கூறப்படுகிறது. இதனையடுத்து ரவுடி முருகனை சுற்றி வளைத்த போலீசார் என்கவுன்டர் செய்தது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட எஸ்.பி.
சரவணன் நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், பழனி காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படை ரவுடியை பிடிக்க முயன்ற போது, அரிவாளால் தாக்கியதால் என்கவுன்ட்டர் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நெல்லை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களை நேரில் சந்தித்த தென் மண்டல ஐஜி அன்பு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர்
செய்தியாளர்களை சந்தித்த அவர், காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவிடம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் களக்காடு காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.








