பழனியில் அடுத்த 2 நாள்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்..!

பழனி மலைக்கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை இன்றும், நாளையும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.…

பழனி மலைக்கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை இன்றும், நாளையும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மேலே செல்வதற்கு ஏதுவாக மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்திவைக்கப்பட்டு பராமரிப்புபணி செய்யப்படுகிறது.

இதன்படி மாதாந்திர பராமரிப்புப்பணி காரணமாக செவ்வாய்கிழமையான இன்றும், புதன்கிழமையான நாளையும் இரண்டுநாட்கள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பழுதடைந்த உதிரிபாகங்கள் மாற்றப்பட்டு, பழுதுகள் நீக்கப்பட்டு நாளை முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு விடப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு நாட்களும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிவழிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலை பயன்படுத்தி மேலே சென்று சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாதம் தோறும் பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் மட்டுமே நிறுத்தப்படும் நிலையில், கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், இந்த மாதம் மட்டும் இரண்டு நாட்கள் ரோப்கார் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.