இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக ராக்கெட் விஞ்ஞானி சோமநாத்தை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பதவி வகித்துவரும் சிவனின் பதவிக்காலம் நாளை நிறைவடையவுள்ளது. இதனையடுத்து இஸ்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக சோமநாத்தை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் தலைவராக சோமநாத் பதவி வகிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தலைவர் சிவனின் பணிக்காலம் 1 வருடம் நீட்டிக்கப்பட்டதை அடுத்து, அவர் கடந்த 4 ஆண்டுகளாக இஸ்ரோவின் தலைவராக இருந்தார்.
இந்தியாவின் சிறந்த ராக்கெட் விஞ்ஞானிகளில் ஒருவரான சோமநாத், கேரளாவைச் சேர்ந்தவர். இவர் 1963-ஆம் ஆண்டு பிறந்தார். கேரளப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்றவர். இந்திய தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனத்தில் விமானப் பொறியியல் பாடத்தில் தங்கப் பதக்கம் பெற்று தனது முதுநிலைப் பட்டத்தை முடித்தார்.
இவர், ஜிஎஸ்எல்வி என்ற முக்கிய ராக்கெட் தொழில்நுட்பங்களில் மிகப் பெரிய பங்கு வகித்திருக்கிறார். மேலும், ஆரம்ப காலத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட் ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இவர் பொறுப்பு ஏற்றிருந்தார். தற்போது நியமிக்கப்பட்டுள்ள சோமநாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தலைமையில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சூரியனில் ஆராய்ச்சி செய்யப்படும் ஆதித்யா திட்டம், மங்கள்யான் – 2, சந்திரயான் – 3 போன்ற முக்கிய திட்டங்களை செயல்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன், கேரளாவைச் சேர்ந்த கஸ்தூரி ரங்கன், மாதவன் நாயர், கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இஸ்ரோ தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.








