ஜீப்பை அகற்றாமல் போடப்பட்ட சாலை: வேலூரில் ஸ்மார்ட்சிட்டி அட்ராசிட்டி!

வேலூர் மாநகராட்சியில் ஜீப்பை அப்புறப்படுத்தாமலேயே தார் சாலை போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாநகராட்சியின் பேரி காளியம்மன் கோயில் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை அப்புறப்படுத்தாமலேயே சிமெண்ட்…

வேலூர் மாநகராட்சியில் ஜீப்பை அப்புறப்படுத்தாமலேயே தார் சாலை போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாநகராட்சியின் பேரி காளியம்மன் கோயில் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை அப்புறப்படுத்தாமலேயே சிமெண்ட் ரோடு போட்டிருந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளானது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பை அப்புறப்படுத்தாமல் தார் சாலை போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட வேலூர் பகுதியில், தார் தாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாலை அமைப்பவர்கள் நின்று கொண்டுள்ள வாகனங்களைக் கூட தள்ளி நிறுத்தாமல் அதன் மேலேயே சாலை அமைக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது.  கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற அவசர கதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், கால்வாயின் மீது சாலைகள் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், வேலூரில் சாமிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் பயன்படுத்தப்படாத ஜீப் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த ஜீப்பை அப்புறப்படுத்தாமல் தார் சாலை போடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.