சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு உதவிடும் நபர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசரகால உதவியினை பொதுமக்கள் செய்யவேண்டும் என்றும், ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அனைத்து விபத்துக்களையும் மாவட்ட ஆட்சியரின் கீழ் இயங்கும் ‘மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு’ ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விபத்துகளின் போது உதவி புரிவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதற்காக பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, விபத்துகளில் சிக்கி இருப்பவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்று அவர்களை காப்பாற்ற, விபத்து நடக்கும் இடத்திற்கு அருகில் இருப்பவர்களை ஊக்குவிக்க கொடுக்க பட்ட அறிவிப்பாக பார்க்கப்படுகிறது எனவும், உதவி என்பது எந்த வித பலனும் எதிர் பார்க்காமல் செய்ய வேண்டிய ஒன்று எனவும் மக்கள் தங்கள் கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.








