மானிய டீசல் விலை உயர்வைக் கண்டித்து பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் மூன்றாவது நாளாகக் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 350 விசைப்படகுகள், 500 ஃபைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். விசைப்படகுகள் மற்றும் ஃபைபர் படகுகளுக்கு பழையாறு துறைமுகத்தில் மீன்வளத்துறை சார்பில் உள்ள பெட்ரோல் பங்க் மூலம் மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனியார் பங்கு மூலம் விற்பனை செய்யப்படும் டீசல் விலையை விட துறைமுகத்தில் மீன்பிடி துறையின் மூலம் விற்பனை செய்யப்படும் மானிய டீசலின் விலை அதிகமாக உள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் பங்க் விற்பனை செய்யும் டீசல் விலையிலிருந்து 20 சதவீதம் குறைத்து மானியமாக வழங்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் வழங்கினால் ஒரு லிட்டர் டீசல் 72 ரூபாய்க்கு மீனவர்களுக்கு கிடைக்கும். ஆனால் தற்போது அதிக விலை கொடுத்து டீசல் வாங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், அதனை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும் பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் மூன்றாவது நாளாகக் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் படகுகள் கடலுக்குள் செல்லாததால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.








