பிரிட்டன் பிரதமர் தேர்தல் – 2வது சுற்றிலும் ரிஷி முதலிடம்

பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முதலிடம் பிடித்துள்ளார். பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து…

பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முதலிடம் பிடித்துள்ளார்.

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து கட்சியின் புதிய தலைவர் மற்றும் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான போட்டி நேற்று துவங்கியது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், சுயெல்லா பிரேவர்மேன், பாகிஸ்தானைப் பூர்விகமாக கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் உள்ளிட்ட 8 பேர் பிரதமருக்கான தேர்தலில் பங்கேற்றனர். பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் இந்த தேர்தல் பல சுற்றுகளை உள்ளடக்கியது.

குறைந்தது 20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பவர்கள் மட்டுமே பிரதமர் தேர்தலில் போட்டியிட முடியும். முதல் சுற்றில் 30 எம்பிக்களுக்கு குறைவாக வாக்குகள் பெறுபவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

ஒவ்வொரு சுற்றிலும் குறைவான வாக்குகளை பெறுபவர்கள் போட்டியில் நீக்கப்பட்டு இறுதியாக 2 போட்டியாளர்கள் எஞ்சும் வரை எம்பிக்கள் வாக்கெடுப்புகள் நடைபெறும்.

இறுதியில் நாடு முழுவதும் உள்ள சுமார் 1.6 லட்சம் கன்செர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் வாக்களித்து இந்த 2 போட்டியாளர்களில் ஒருவரை கட்சித் தலைவராக தேர்தெடுப்பார்கள். அவரே நாட்டின் பிரதமராகவும் நியமிக்கப்படுவார்.

நேற்று நடைபெற்ற இதற்கான முதல் கட்ட போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவருமான ரிஷி சுனக் 88 எம்பிக்களின் வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார்.

வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் 67 வாக்குகளையும், வெளியுறவுத் துறை அமைச்சர் லீஸ் ட்ரூஸ் 50 வாக்குகளையும், முன்னாள் முமைச்சர் கெமி பேடினோக் 40 வாக்குகளையும், டோம் டூஜென்தட் 37 வாக்குகளையும், மற்றொரு இந்திய வம்சாவளியினரான சூல்லா ப்ராவர்மன் 32 வாக்குகளையும் பெற்றனர்.

25 வாக்குகள் பெற்ற நதிம் ஜஹாவியும், 18 வாக்குகள் பெற்ற முன்னாள் அமைச்சர் ஜெரிமி ஹன்ட்டும் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து, மொத்த போட்டியாளர்களின் எண்ணிக்கை 8ல் இருந்து 6 ஆக குறைந்தது.

அடுத்த சுற்று தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில், ரிஷி சுனக் 101 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார். இவருக்கு அடுத்ததாக பென்னி மோர்டான்ட் 83 வாக்குகளையும், லீஸ் ட்ரூஸ் 64 வாக்குகளையும், கெமி பேடினோக் 49 வாக்குகளையும், டோம் டூஜென்தட் 32 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 27 வாக்குகளைப் பெற்ற சூல்லா ப்ராவர்மன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

2ம் சுற்று தேர்தலிலும் ரிஷி சுனக் முன்னிலை வகிப்பது, அவர் இறுதிச் சுற்றிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்திருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.