பிரிட்டன் பிரதமர் தேர்தல் – வரலாறு படைப்பாரா ரிஷி சுனக்?

பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட வாக்கெடுப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முதலிடத்தில் உள்ளார். பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து…

பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட வாக்கெடுப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முதலிடத்தில் உள்ளார்.

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து கட்சியின் புதிய தலைவர் மற்றும் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான போட்டி துவங்கியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், சுயெல்லா பிரேவர்மேன், பாகிஸ்தானைப் பூர்விகமாக கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் உள்ளிட்ட 8 பேர் பிரதமருக்கான தேர்தலில் பங்கேற்றனர். பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் இந்த தேர்தல் பல சுற்றுகளை உள்ளடக்கியது.

குறைந்தது 20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பவர்கள் மட்டுமே பிரதமர் தேர்தலில் போட்டியிட முடியும். முதல் சுற்றில் 30 எம்பிக்களுக்கு குறைவாக வாக்குகள் பெறுபவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

ஒவ்வொரு சுற்றிலும் குறைவான வாக்குகளை பெறுபவர்கள் போட்டியில் நீக்கப்பட்டு இறுதியாக 2 போட்டியாளர்கள் எஞ்சும் வரை எம்பிக்கள் வாக்கெடுப்புகள் நடைபெறும்.

இறுதியில் நாடு முழுவதும் உள்ள சுமார் 1.6 லட்சம் கன்செர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் வாக்களித்து இந்த 2 போட்டியாளர்களில் ஒருவரை கட்சித் தலைவராக தேர்தெடுப்பார்கள். அவரே நாட்டின் பிரதமராகவும் நியமிக்கப்படுவார்.

தற்போது நடைபெற்ற இதற்கான முதல் கட்ட போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவருமான ரிஷி சுனக் 88 எம்பிக்களின் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் 67 வாக்குகளையும், வெளியுறவுத் துறை அமைச்சர் லீஸ் ட்ரூஸ் 50 வாக்குகளையும், முன்னாள் முமைச்சர் கெமி பேடினோக் 40 வாக்குகளையும், டோம் டூஜென்தட் 37 வாக்குகளையும், மற்றொரு இந்திய வம்சாவளியினரான சூல்லா ப்ராவர்மன் 32 வாக்குகளையும் பெற்று போட்டியில் தொடருகின்றனர்.

25 வாக்குகள் மட்டுமே பெற்ற நதிம் ஜஹாவியும், 18 வாக்குகளை மட்டுமே பெற்ற முன்னாள் அமைச்சர் ஜெரிமி ஹன்ட்டும் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மொத்த போட்டியாளர்களின் எண்ணிக்கை 8ல் இருந்து தற்போது 6 ஆக குறைந்துள்ளது.

அடுத்த சுற்று தேர்தல் இன்று நடைபெற இருக்கிறது.

முதல் சுற்றில் ரிஷி சுனக் பெற்ற வாக்குக்கும் அவரை அடுத்து வந்துள்ள பென்னி மொர்டான்ட் பெற்ற வாக்குக்கும் இடையே 21 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. இது மிகப் பெரிய வித்தியாம் என்பதால், ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இறுதிச் சுற்று தேர்தலில் ரிஷி சுனக் வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டனின் முதல் பிரதமர் எனும் வரலாற்றை ரிஷி சுனக் படைப்பார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் இவர். இவரது தாத்தாவும் பாட்டியும் இந்தியாவில் இருந்து ஆப்ரிக்கா சென்று அங்கு வசித்து வந்தனர். பின்னர், அங்கு இந்தியர்களுக்கு எதிர்ப்பு கிளம்பவே இங்கிலாந்து சென்ற இவரது பாட்டி, கடினமான போராட்டங்களுக்கு பின்னர் ஓராண்டாக பணம் சம்பாதித்து தனது கணவர் மற்றும் குழந்தைகளை இங்கிலாந்துக்கு அழைத்துக் கொண்டார். இதை தனது பிரச்சார வீடியோவில் ரிஷி சுனக்கே குறிப்பிட்டிருந்தார்.

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பகுதியில் 1980ல் பிறந்த ரிஷி சுனக், தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். தொடர்ந்து வணிக மேலாண்மையில் பட்டம் பெற்ற இவர், தனியார் நிறுவனங்களுக்கு நிதி வல்லுனராக பணியாற்றினார். பின்னர் தனது கடின உழைப்பின் மூலம் அவற்றின் பங்குதாரராகவும் மாறினார்.

ரிஷி சுனக், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மருமகன். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ரிஷி சுனக் வணிக மேலாண்மை படித்துக் கொண்டிருந்தபோது, நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷ்டா மூர்த்தியை சந்தித்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கன்சர்வேடிவ் கட்சி சார்பாக 2015ம் ஆண்டு யாரக்ஷிரே பகுதியின் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், தெரசா மே ஆட்சிக் காலத்தில், இணை அமைச்சராக பதவி வகித்தார். போரிஸ் ஜான்சன் ஆட்சியில் 2020ம் ஆண்டு நிதி அமைச்சராக பதவி ஏற்றார். கொரோனா பெருந்தொற்று பிரிட்டன் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்க இருந்த நிலையில், அதில் இருந்து நாட்டை மீட்ட பெருமைக்குரியவர் ரிஷி சுனக்.

போரிஸ் ஜான்சன் மீது பல்வேறு புகார்கள் எழுந்தபோது, அதன் உண்மைத் தன்மையை கருத்தில் கொண்டு அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறும் முடிவை முதலில் எடுத்தவர் ரிஷி சுனக். அவரைத் தொடர்ந்தே மற்றவர்கள் பதவி விலகினர். இதன் பின்னரே, போரிஸ் ஜான்சன் பதவி விலகினார்.

புதிய பிரதமருக்கான போட்டியில் முன்னிலை வகிக்கும் ரிஷி சுனக், வெற்றி பெற்று இங்கிலாந்து வரலாற்றில் புதிய வரலாறு படைப்பாரா?

வரும் நாட்கள் விடை கூறும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.