ஆட்டத்துக்கு முன்பே கையில் 50 ரன் என்று எழுதியபடி, ரிங்கு ஆட்ட நாயகன் விருது பெற்ற சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.
ஐபிஎல்.இல் நேற்று நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், சிறப்பாக ஆடி கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார் ரிங்கு சிங். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்களை எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, பவர்பிளே முடிவிலேயே இரண்டு விக்கெட்களை பறிகொடுத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொல்கத்தா அணி வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்டன. நிதிஷ் ராணாவும், ரிங்கு சிங்கும் சிறப்பாக ஆடி த்ரில் வெற்றியை கொடுத்தனர். நெருக்கடியான சூழ்நிலையில், 23 பந்துகளில் 42 ரன்கள் அடித்த ரிங்கு சிங் தான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டி முடிந்து நிதிஷ் ராணாவும், ரிங்கு சிங்கும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ரிங்குவின் கையில் ஏதோ எழுதப்பட்டிருப்பது குறித்து ராணா கேட்டார்.
அதற்கு ரிங்கு, “ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே இன்று நான் 50 ரன்களுக்கு மேல் அடித்து ஆட்ட நாயகன் விருதையும் பெறுவேன் என தோன்றியது. அதனால் என் கையில் 50 ரன் என்று எழுதி ஹார்டின் வரைந்துள்ளேன்.” என்று கூறினார். ஆட்டத்துக்கு முன்பே கையில் எழுதியபடி, ரிங்கு ஆட்ட நாயகன் விருது பெற்ற சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. கூடவே ரிங்குவின் கடந்த காலம் குறித்து பேசப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் தான் ரிங்குவின் சொந்த ஊர். வயது 24. சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை கேஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்தார். அவரது சகோதரர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டிவந்தார். 2015-ம் ஆண்டு அவர் குடும்பம் கடனில் தத்தளித்துள்ளது. அப்போது அண்டர் 19 போட்டியில் கொடுக்கப்பட்ட செலவினங்களை சேமித்து கடனை அடைக்க உதவியுள்ளார்.
ஒருகட்டத்தில் கடும் நெருக்கடி காரணமாக வீடுகளில் சுத்தம் செய்யும் பணியை செய்ய அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், கிரிக்கெட் தான் வாழ்க்கை என்று அவர் உறுதியாக இருந்தார். 2016 ஆண்டு உத்தரப்பிரதேச அணிக்காக அறிமுகம் ஆனார். 2017-ம் ஆண்டு பஞ்சாப் அணி அவரை ஐ.பி.எல் ஏலத்தில் எடுத்தது. அங்கு கடைசிவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. 2018-ம் ஆண்டு கொல்கத்தா அணியில் இணைந்தார். 2021 வரை அங்கிருந்தாலும், காயம் காரணமாக கடந்தாண்டு அணியில் இருந்து விலகினார்.
கடந்த ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை ரூ.55 லட்சத்துக்கு எடுத்தது. “அலிகரில் இருந்து ரஞ்சி கோப்பையில் பலர் விளையாடியுள்ளனர். ஆனால், ஐ.பி.எல்லில் ஆடும் முதல் நபர் நான்தான். அழுத்தங்கள் இருந்தாலும், இந்த வாய்ப்புக்காக 5 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தேன். அதனால் காயங்களில் இருந்து மீண்டு கடின உழைப்பைப் போட்டேன்.” என்று ரிங்கு சிங் கூறியுள்ளார்.