வங்க கடலில் நாளை மறுநாள் உருவாகிறது ‘ரிமல்’ புயல்! – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகவுள்ள புயலுக்கு  ‘ரிமல்’  என பெயரிடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,  கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகவுள்ள புயலுக்கு  ‘ரிமல்’  என பெயரிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,  கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது.  இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில்,  தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து நாளை (மே – 24ம் தேதி) காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது.  அதன்பிறகு, வடகிழக்கு நோக்கி நகர்ந்து,  மேலும் தீவிரமடைந்து மத்திய கிழக்கு வங்க கடலில் வரும் 25 ஆம் தேதி காலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படத்தின் 2-வது பாடல் எப்போது தெரியுமா?

தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையை மே 26ம் மாலைக்குள் தீவிரப்புயலாக கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயல் வடக்குப்பகுதியில் நகரும்போது தமிழ்நாட்டில் மழை குறைந்து,  வெப்பம் அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென்னிந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு பெயரிடும் முறைப்படி இந்த முறை ஓமன் நாடு பரிந்துரைத்த ‘ரிமல்’ என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.