முக்கியச் செய்திகள் லைப் ஸ்டைல்

அம்மாவிற்கு 2வது திருமணம் ஏன் செய்து வைத்தோம்? : மனம் திறக்கும் சிதார்த்தன் கருணாநிதி

ஒரு சமூக மாற்றத்தை யார் முதலில் உருவாக்குகிறார்களோ அவர்கள் வரலாற்றில் எப்போதும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள். இன்று நம் சமூகத்தில் பெண்கள் மீதிருக்கும் பிம்பத்தையும், அவர்கள் அடைந்திருக்கும் குறைந்தபட்ச விடுதலைக்கும்,காரணமான பல முன்னோடிகளை இச்சமூகம் வரலாற்றில் பார்த்திருக்கிறது. ஒரு தனிமனிதன் சமூக மாற்றத்தின் முதல்படியை எடுத்துவைக்க வேண்டும். அப்படி ஒரு முதல்படியை கோவையில் வசித்து வரும் சிதார்த்தன் கருணாநிதி எடுத்து வைத்திருக்கிறார். அம்மாவின் இரண்டாவது திருமணத்தைப்பற்றி ஆங்கிலத்தில் ‘Right to marry ‘ என்ற புத்தகத்தை எழுதி, pen to publish-ல் வெளியிட்டுருக்கிறார்.

புத்தகம் தொடர்பாக அவரிடம் பேசினோம். ‘எங்கள் கிராமத்தில் நான் முன்றாவது பொறியியல் பட்டதாரி. எனது குடும்பத்தில் நான்தான் முதல்பட்டதாரியும்கூட. 2019-ல் தான் அம்மாவிற்கு இரண்டாவது திருமணம் ஆனது. வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி இரண்டாவது ஆண்டு திருமண நாளை கொண்டாட உள்ளோம்.

இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியது? எனக் கேட்டோம்.

“அப்பா மரணமடைந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்மா தனியாகத்தான் எல்லா சிக்கலையும் சமாளித்தார். சொந்தங்களிடம் எந்த உதவியையும் நாடியது இல்லை. இருந்தும் அம்மாவிற்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் நான் கல்லூரி முன்றாம் ஆண்டு படிக்கும்போதுதான் தோன்றியது. முகநூலில் சில நண்பர்கள் எழுதும் பதிவு என்னுள் பல கேள்விகளை எழுப்பியது. பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகம் தொடர்பாக முகநூலில் படித்த பதிவைத்தொடர்ந்து, புத்தகத்தை வாங்கிப்படித்தேன். அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. எங்கள் ஊர் அரசமரத்தடியில் நடந்து வந்த ஆரம்ப பள்ளியில் படித்த போது, எனது ஆசிரியர் என்னிடம் ’அம்மாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டியதுதானே’. என்று கேட்டார். அப்போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரின் கேள்விதான் என் மனதில் மாற்றத்திற்கான முதல் விதையாக இருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.”

இரண்டாவது திருமணம் செய்துகொள்ள அம்மா உடனே சம்மதித்தார்களா?

“உடனே சம்மதிக்கவில்லை. நானும் எனது தம்பி மகிழனும், இதுபற்றி தொடர்ந்து அம்மாவிடம் விவாதித்தோம். இயல்பாகவே அம்மா முற்போக்காக யோசிப்பவர் என்பதால் நாங்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டார். ஆனால் திருமணம் தொடர்பாக, உறவினர்களிடம் பேசியபோது, அவர்கள் யாருமே சம்மதிக்கவில்லை. நாங்கள்தான் திருமணம் செய்து வைக்கிறோம் என்று தெரிந்ததும். எனது பாட்டி வீட்டுக்கு வருவதையே நிறுத்திவிட்டார். ஆனால் இந்த எதிர்ப்பு எங்கள் மன உறுதியை தகர்க்கவில்லை. சிறு வயது முதல் மற்றவர்கள் சொல்வதை பெரிதாக நாங்கள் பொருட்படுத்துவதில்லை.அதனால் என் அம்மாவின் திருமணத்தை தடைகளை கடந்து சாத்தியமாக்க முடிந்தது.”

அப்பாவை எப்படி அம்மா சந்தித்தார்கள்?

“திருமண பதிவு மையங்களில் பதிவு செய்யலாம் என்றுதான் முதலில் யோசித்தோம். அம்மா ஞாயிற்றுகிழமைகளில் தேவாலயத்திற்கு செல்வார். அங்கு வரும் அம்மாவின் நண்பர் ஒருவர், அப்பாவைப் பற்றி கூறியிருக்கிறார். அப்பா பெயர் ஏழுமலை. எங்கள் ஊர் வளையாம்பட்டிலிருந்து 3 கிலோமீட்டர் சென்றால் மஞ்சபுத்தூர் என்ற ஊர் வரும். அதுதான் அப்பாவின் ஊர். அப்பா ஏழுமலையின் துணைவியாரும் மரணமடைந்து 10 வருடங்கள் ஆகிறது. தற்போது எனது அம்மாவும் அப்பாவும் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ்கின்றனர். திருமணத்தின்போது எனது அப்பாவை ஏற்றுகொள்ள மறுத்த சொந்தங்கள் இப்போது ஏற்றுகொண்டுள்ளனர். இன்று அப்பாவின் ஊரில் கறி விருந்து, அதற்கு எனது பாட்டி சென்றிருக்கிறார்.”

புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியது?

“எனது நண்பர்கள்தான் வலியுறுத்தினார்கள். 2020- ஊரடங்கின்போது வீட்டில் இருந்து வேலை செய்தேன். அப்போதுதான் புத்தகத்தை எழுதி முடிக்க வேண்டும் என்று தோன்றியது. தற்போது ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதியிருக்கிறேன். எனது தம்பி மகிழன் இப்புத்தகத்தை தமிழாக்கம் செய்ய உள்ளார்.”

உங்கள் புத்தகத்துக்கு கிடைத்த வரவேற்பு, பாராட்டுகள் குறித்துச் சொல்லுங்களேன்?

“முகம் தெரியாத பலரும், புத்தகத்தைப் பற்றி பதிவிடுகிறார்கள்.‘ உங்கள் புத்தகத்தை படித்த பிறகுதான் எனது அம்மாவுக்கு துணை வேண்டும் என்ற எண்ணம் வருகிறது . விரைவில் அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். ஒரு நற்செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்’ என்று யாரோ ஒரு வாசகர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். விதவை மறுமணம், இரண்டாவது திருமணம் என்பதெல்லாம் சாதாரன நிகழ்வுகளாக மாற வேண்டும். அம்மாவிற்கு திருமணம் செய்துவைத்துவிட்டேன் என்ற செய்தியை ஏதோ ஒரு சாதனையைப்போல் மற்றவர்கள் பார்ப்பது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. இதை ஒரு இயல்பான விஷயமாக மாற்றவே நான் புத்தகத்தை எழுதினேன்.

சமூகத்தில் பெரிய மாற்றத்திற்கான விதையை , பெற்றோருக்கான சிறந்த பிள்ளையாக ,ஒரு எழுத்தாளராக முன்னெடுத்திருக்கும் சித்தார்த்தன் அடுத்ததாக ஆங்கில இலக்கணம் தொர்பாக, ஒரு நூலை எழுதிக்கொண்டிருக்கிறார். அனுபவ வழியில் ஆங்கிலத்தை எப்படி மற்றவர்கள் கற்றுக்கொண்டார்கள் என்பது தொடர்பாக ஒரு நாவல் வடிவில் இந்த புத்தகம் இருக்கும் என்று என்கிறார்.”

உண்மையான ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்த முதல் படி எடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் சிதார்த்தன் கருணாநிதிக்கு நியூஸ் 7 குழு சார்பில் அன்பும் பாராட்டும்.

Advertisement:

Related posts

”இந்தியர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்’- ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்!

Jayapriya

எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான்; வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கருத்து!

Saravana

ஹேக் செய்யப்பட்ட டோமினோஸ் டேட்டாபேஸ்: 10 லட்ச வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்கள் திருட்டு

Karthick