குழந்தையின் உயிரை காக்கவே வலது கை அகற்றம்: விசாரணைக் குழு அறிக்கை!

குழந்தையின் உயிரைக் காக்கவே அவரின் செயலிழந்த வலது கை அகற்றப்பட்டதாக, விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அழுகியதால், அந்த…

குழந்தையின் உயிரைக் காக்கவே அவரின் செயலிழந்த வலது கை அகற்றப்பட்டதாக, விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அழுகியதால், அந்த கை அகற்றப்பட்டது. குழந்தையின் இந்த நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வார்டில் இருந்த செவிலியரின் அலட்சியமே காரணம் என்று குழந்தையின் தாய் அஜிஷா குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், குழந்தைக்கு சிகிச்சைஅளித்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, குழந்தையின் பெற்றோரிடமும் தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவர்களிடம் சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் விசாரணை அறிக்கையை மருத்துவர்கள் குழு, அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;

  1. குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனே கால தாமதம் இன்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

2. Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத் தொற்று ரத்த நாளத்தை பாதித்த காரணத்தால் குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

3. குழந்தையின் உயிரை பாதுகாக்கவே அவரின் வலது கையை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

4. Venflon ஊசி தமனியில் போடவில்லை என்பது பெற்றோர் மற்றும் மருத்துவர்களின்                    வாக்கு மூலம் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

5. குழந்தைக்கு மருந்து கசிவினால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதி                செய்யப்பட்டுள்ளது.

6. குழந்தையின் வலது கையில் வலி மற்றும் நிறமாற்றம் ஏற்பட்ட பின்னர் செவிலியர்                மற்றும் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்து உள்ளனர்.

7. குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் Thrombophlebitis என்று கணித்து சிகிச்சை         அளித்துள்ளார்.

8. ரத்த நாள அடைப்பு சிகிச்சை முறைகளாலோ, செலுத்தப்பட்ட மருந்தினாலோ                              ஏற்படவில்லை.

இவ்வாறு மருத்துவர்கள் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.