தெலங்கானா முதல்வராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி!

தெலங்கானாவின் முதல் காங்கிரஸ் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.  நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.  அதுவும் தெலங்கானா தனி மாநிலமாக…

தெலங்கானாவின் முதல் காங்கிரஸ் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். 

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.  அதுவும் தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்து கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றியது.

மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.  தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கமாரெட்டி மற்றும் கோடங்கல் பகுதியில் போட்டியிட்ட நிலையில் கோடங்கல் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால், தெலங்கானா மாநில முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பார் என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.  இதில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டார்.  அவருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அவரோடு,  உத்தம் குமார் ரெட்டி,  ஸ்ரீதர் பாபு,  பொன்னம் பிரபாகர்,  கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி,  தாமோதர் ராஜநரசிம்மா,  பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி,  தனா அனசூயா,  தும்மல நாகேஸ்வர ராவ்,  கொண்டா சுரேகா,  ஜூபல்லி கிருஷ்ணாராவ் ஆகிய 12 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.  தெலங்கானா மாநிலத்தின் துணை முதலமைச்சராக மல்லு பாட்டி விக்ரமார்கா பதவி ஏற்றார்.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி,  செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.