உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேசத்தில் 250 க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது. யோகி ஆதித்யா நாத் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதன் காரணமாக, உத்தரப்பிரதேசத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரகாண்ட்டில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, அந்த கட்சி மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் சுமார் 20 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 30 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. கடும் பின்னடைவை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதால், அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதை அடுத்து முதலமைச்சர் பைரன் சிங், பெருமாள் கோயில் ஒன்றில் சாமி தரிசனம் செய்தார்.
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது. பாஜக 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி உள்ளிட்ட பிற கட்சிகள் 10 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் முடிவுகள் வெளியான பிறகே கோவாவில் தெளிவான சூழல் தெரியவரும்.







