முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

கட்டுமர பயணம் செய்யும் சென்னை வாசிகள் ; ஆபத்தான அன்றாட பயணம்

தமிழ்நாட்டின் தலைநகரமாக பரபரப்பாக இயங்கி வரும் நம் சென்னை மாநகரில் போக்குவரத்துக்காக பலதரப்பட்ட உயர்ரக வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன.

அனைத்து தரப்பிலும் சிறந்து விளங்கி முன்னேறி வரும் இந்த மாநகரில் இன்னும் கவனிக்கப்படாத பகுதிகள் இருப்பது மறுக்க முடியாத உண்மையாக மாறி வருகிறது. கடலோடு உறவாக வாழ்ந்து வரும் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாப்பில்லாத கட்டுமரத்தில் அன்றாட தேவைகளுக்காக பயணம் செய்து வருகின்றனர் என்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சீனிவாசபுரம் நெல்சன் மாணிக்கம் சாலை பகுதியில் இருந்து எம் ஆர் சி நகர் பகுதிக்கு செல்ல வேண்டிய தேவை இருக்கும் அந்த பகுதி மக்கள் கட்டுமரத்தில் ஆபத்தான வகையில் தான் பயணம் செய்கின்றனர்.

இதற்கு மாற்றுப்பாதையில் சாலை வழியாக செல்ல அதிக நேரம் எடுப்பதாலும், போக்குவரத்துக்கு அதிகம் பணம் செலவாவதாலும் ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட மக்கள் கட்டுமரத்தில் பயணிக்கின்றனர். ஏற்கனவே இங்கு பாதையை கடக்க பாலம் இருந்திருக்கிறது அதில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்ததால் மக்கள் பயணம் செய்ய பெரிதும் சிரமப்பட்டதை அடுத்து மீனவர் செல்வம் தானாகவே முன் வந்து கட்டைகள் சேர்த்து கயிற்றில் கட்டி கட்டுமரம் போல் தயாரித்து மக்கள் பயணிக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக வெறும் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக் கொண்டு காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மழை, வெயில் கொசுத்தொல்லை என எதையும் பொருட்படுத்தாமல் தன்னை வருத்திக்கொண்டு அங்கேயே அமர்ந்து கட்டுமரத்தை இயக்கி வருகிறார்.

கழிவு நீர் கலந்த சேறும் சகதியுமான அந்த கயிற்றை வெறும் கைகளால் இழுப்பதால் கைகள் நீரில் ஊரி துர்நாற்றம் வீசுவதுடன் எரிச்சல் எடுக்கும் , உணவு கூட உண்ண முடியாது என்று மீனவர் செல்வம் வேதனை தெரிவித்தார்.

இதில் சம்பாதித்து எதுவும் ஆகப் போவதில்லை ஆனால் இதை விடாமல் என்னால் முடிந்ததை இந்த மக்களுக்கு செய்து வருகிறேன் என்றார்.

தொடர்புடைய வீடியோ ;

அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுவயதிலிருந்து இந்த வழியில் பயணித்து வருகின்றோம். முதலில் பாலம் இருந்ததால் உதவியாக இருந்தது இப்போது பல வருடங்களாக இந்த கட்டு மரத்தில் தான் பயணித்து வருகிறோம் .இது ஆபத்தானது தான் ஆனால் வேறு வழியில் செல்ல வேண்டுமானால் வெகு தூரமாகும் பயணச் செலவு அதிகமாகும் என்பதற்காக இந்த போக்குவரத்தையே பயன்படுத்தி வருகிறோம். இளம் வயதினர் கூட இதில் பயணித்து விடுகிறார்கள் ஆனால் பள்ளி குழந்தைகளும் பெரியவர்களும் இதில் பயணிக்கும் போது வெகு கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே பலர் இதில் வழுக்கி விழுந்து அடிபட்டுள்ளனர் இதில் மூழ்கி இந்த கழிவு நீரை குடித்ததால் உடல்நிலை சரியில்லாமல் போய் சிலர் இறந்தும் கூட இருக்கின்றனர்.

எங்கள் பிரச்சனை பற்றி பலரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை மேயர், சட்டமன்ற உறுப்பினர் என பலருக்கு தெரிவித்து அவர்கள் வந்து பார்த்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. மழைக்காலங்களில் எல்லாம் இதில் பயணிப்பது மிகவும் சிரமமாக இருக்கும் எங்களுக்கு நிரந்தரமாக உறுதியான பாலத்தை அரசு அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 

– ரேவதி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மயிலாடுதுறை ஊரக வளர்ச்சித் துறையில் 109 பணிக்கான அரசாணை வெளியீடு

‘பல்லாவரத்தில் விரைவில் புதிய மின் நிலையம்’ – அமைச்சர் செந்தில் பாலாஜி

Arivazhagan Chinnasamy

ஆளுநர் ஆர்.என்.ரவி – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு; நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்தல்

Halley Karthik