தமிழ்நாட்டின் காவல்துறை குறித்து ஆட்சியாளர்கள் பேசும்போதெல்லாம், நமது காவல்துறையை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு சமமாக புகழ்ந்து பேசுவர். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டு காவல்துறையில் பணியாற்றுபவர்களின் நிலை அப்படிதான் உள்ளதா ? என்பது குறித்து ஆராய்ந்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பவர்களை காவல்துறையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதேபோல், அரசின் மற்றொரு துறையான வருவாய்துறைக்கு குரூப்-4 தேர்வு மூலம் 10ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். வருவாய்துறையில் பணியாற்றவும், காவல்துறையில் பணியாற்றவும், கல்வி தகுதி இருவருக்குமே பத்தாம் வகுப்பு என்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இருவருக்குமான ஊதிய விகிதம் என்பது மலைக்கும், மடுவுக்கும் உள்ள தூரம் என காலம் காலமாக காவல்துறையில் பணியாற்றுபவர்கள் புலம்பி வருகின்றனர். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணை உள்ளத்தோடு அணுகி, இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என காவல்துறையில் பணியாற்றுபவர்கள் அரசுக்கு கோரிக்கையாக விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காவலர்கள், கடந்த இரண்டு சட்ட மன்ற தேர்தல்களில் திமுக காவல்துறைக்கு பல்வேறு கோரிக்கைகள் அளித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் 25 ஆண்டுகள் பணியாற்ற காவலர்களுக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கிடைக்கும் என்றனர். அந்த தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அதனால் அந்த கோரிக்கை காற்றோடு காற்றாக கரைந்துவிட்டது.
இதற்கிடையே, கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தமது தேர்தல் வாக்குறுதியில் காவலர் பணியில் சேர்ந்து இருபது ஆண்டு ஆனவர்களுக்கு சிறப்பு எஸ்.ஐ. அந்தஸ்து வழங்கப்படும் என்றும், 25 ஆண்டுகள் ஆனவர்களுக்கு எஸ்.ஐ. பணி வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது. தற்போது இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு எப்போது அறிக்கை அளித்து, எப்போது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரியவில்லை என கவலை தொய்ந்த குரலில் கூறுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, தங்களைப்போல் 10ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் வருவாய்துறையில் பணிபுரியும் ஜூனியர் அசிஸ்டென்டுகளுக்கு அடுத்த புரோமோஷன் என்பது 7 ஆண்டுகளில் கிடைத்து விடுகிறது. ஆனால் தாங்கள் பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் கிடைத்துதான் அடுத்த பணி உயர்வு என்பது கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும், காவல்துறையில் காவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது என்றனர்.
எங்களுக்கு அவர்களைப் போல் பதவி உயர்வு உடனடியாக கொடுக்க வேண்டாம். ஊதியமாவது அவர்களுக்கு வழங்ப்படுவதுபோல் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது கருணை பார்வையை தங்களது பக்கம் திருப்ப வேண்டும். மேலும் அரசு அமைத்துள்ள கமிட்டி தமது பணியை விரைந்து செய்ய முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்கின்றனர்.
இராமானுஜம்.கி









